திகார் சிறையில் அடைக்கப்பட்ட காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் அல்டாப் சாவு

புதுடெல்லி: தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்ததாக கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்ட காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் அல்டாப் அகமது ஷா (66), புற்றுநோயால் காலமானார். காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்ததாக, பிரிவினைவாத தலைவர் அல்டாப் அகமது ஷா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அல்டாப்புக்கு, சிறையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த மாதம் மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு சிறுநீரக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 5ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அல்டாப் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் கூறி உள்ளனர். அவருக்கு வயது 66. இவர் ஹூரியத் அமைப்பின் தலைவரான மறைந்த சையது அலி ஷா கிலானியின் மருமகன் ஆவார். மருத்துவமனையில் பேசும் நிலையில் இருந்த போது அல்டாப்பை சந்திக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும், அவர் இறந்த பிறகுதான் உடலை பார்க்க அனுமதித்ததாகவும் அவரது குடும்பத்தினர் கூறி உள்ளனர்.

Related Stories: