காஞ்சிபுரம் ஊராட்சிகளில் வீட்டு வரி, தொழில் வரி ஆன்லைனில் செலுத்தும் வசதி ஏற்பாடு: ஊரக வளர்ச்சி துறை துவக்கம்

வாலாஜாபாத்: மாநகராட்சி, நகராட்சி வரி இனங்கள் ஆன்லைனில் செலுத்துவது போல, இனி ஊராட்சிகளிலும் வீட்டு வரி மற்றும் தொழில் வரி இனங்களை, ஆன்லைனில் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான அடிப்படை விபரங்களை, இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை, ஊரக வளர்ச்சி துறை துவக்கியுள்ளனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சிகளில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், 1,350 குக்கிராமங்களில், பல லட்சம் குடிநீர் இணைப்புகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளது.

இதுதவிர,100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. ஊராட்சிதோறும், குடிநீர் வரி, வீட்டு வரி, நுாலக வரி, தொழில் வரி உள்ளிட்ட பல வித வரி இனங்களை ஊராட்சி நிர்வாகம் வசூலிக்கிறது. வரி இனங்களின் வகைக்கு ஏற்ப, இளஞ் சிவப்பு, பச்சை; மஞ்சள் ஆகிய வெவ்வேறு நிறங்களில் ரசீதுகள் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சிகளை போல அனைத்து ஊராட்சிகளிலும், வீட்டு வரி மற்றும் பிற வரி இனங்களை ஆன்லைனில் வசூலிக்க வேண்டும் என, ஊரகவளர்ச்சி துறை உத்தரவிட்டு உள்ளது.

ஆகஸ்ட் மாதம், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு முறையான வழி காட்டி சுற்றிக்கையை, காஞ்சிபுரம் கலெக்டர் அனுப்பி உள்ளார். அதன்படி, ஊராட்சி வரி இனங்களின் விபரங்களை, https://sdp.nic.in/vptax/ என்ற இணையதளத்தில் ஊராட்சி செயலர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.அந்தந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து அனைத்து விபரங்களையும் விடுபாடு இன்றி பதிவேற்றம் செய்யவேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதில், வாலாஜாபாத் வட்டாரத்தில், அதிக சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், சராசரியாக, 52 சதவீதம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகள் முடிக்கப்பட்டால், இனி ஊராட்சி வரியினங்களை ஆன்லைனில் செலுத்தி, ரசீதுகளை பெறலாம் என, துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஊராட்சிகளில் வரி இனங்கள் ஆன்லைனில் செலுத்தும் முறையை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர்.

வாலாஜாபாத்; உத்திரமேரூர்; ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பேரூராட்சிகளில், வரி இனங்களை அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர் அலுவலகங்களில், பொது மக்கள் நேரடியாக சென்று செலுத்த வேண்டும். அதேபோல், குன்றத்துார், மாங்காடு ஆகிய நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கும், பொது மக்கள் நேரடியாக சென்று வரி இனங்களை செலுத்த வேண்டும். ஊராட்சி நிர்வாகங்களை போல, பேரூராட்சி மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில், ஆன்லைன் வரிசெலுத்தும் முறை கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: