பலத்த பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைப்பு: ராக்கெட் ராஜாவை காவலில் விசாரிக்க போலீஸ் முடிவு

நெல்லை: நாங்குநேரி அருகே வாலிபர் கொலை வழக்கில் கைதான ராக்கெட் ராஜா, பலத்த பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை மாவட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமித்துரை, கடந்த ஜூலை 28ம் தேதி நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மும்பையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வந்த ராக்கெட் ராஜாவை தனிப்படையினர் நேற்று முன்தினம் கைது செய்து  நாங்குநேரி மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மாஜிஸ்திரேட் சிதம்பரம், அவரை வருகிற 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பாளை. மத்திய சிறைக்கு ராக்கெட் ராஜாவை கொண்டு சென்ற போலீசார், சிறைக் கண்காணிப்பாளருடன் ஆலோசித்த பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை கொண்டு சென்று மத்திய சிறையில் அடைத்தனர். ராக்கெட் ராஜா மீது சென்னையில் நடந்த 3 கொலைகள் உட்பட 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்து விசாரிப்பதற்காக அவரை காவலில் எடுக்க ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மினிபஸ் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

திசையன்விளையில் இருந்து நவ்வலடிக்கு மினிபஸ் இயக்கப்பட்டு வருகிறது.  நேற்று முன்தினம் இரவு பஸ் சர்வீஸ் முடிந்ததும், கூடங்குளம் பைபாஸ் ரோட்டில் நவ்வலடி பெட்ரோல் பங்க் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. பஸ் அப்போது பஸ்சுக்குள் ஏறிய மர்ம நபர்கள் மூவர், பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோடினர். இதில் பஸ் சீட் மட்டும் தீயில் கருகியது. ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வெடிகுண்டு வீசப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: