பிரசாந்த் கிஷோர் சொன்னது என்ன?.. நிதிஷ் குமார் திடுக்கிடும் தகவல்

சிதாப் தியாரா: ஐக்கிய ஜனதா தளத்தை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும்படி பிரசாந்த் கிஷோர் கூறியதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘பீகார் முதல்வர் நிதிஷ் குமார் 15 நாட்களுக்கு முன் என்னை அவரது வீட்டுக்கு அழைத்து இருந்தார். ஐக்கிய ஜனதா தளத்தை வழிநடத்தும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், நான் மறுத்து விட்டேன்,’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சமூக ஆர்வலர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த சிதாப்தியாராவிற்கு சென்ற பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் சொந்த விருப்பத்தின் பேரில் என்னை சந்தித்து பேசினார். நான் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர் என்னிடம் நிறைய பேசினார். ஆனால், ஐக்கிய ஜனதா தளத்தை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க வேண்டும் என்று அவர் கூறியதை மறைக்கிறார். அவர் என்ன விரும்பினாலும் பேசட்டும். அவர் என்ன கூறினாலும் அதில் அர்த்தமில்லை. நான்கு - ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அவர் என்னை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க சொன்னார். ஆனால், தற்போது அவர் பாஜவிற்காக பணியாற்றி வருகிறார்,’ என கூறினார்.

Related Stories: