தாம்பரம் அருகே காப்புக்காட்டில் மரநாய் பிடித்தவர் கைது

தாம்பரம்: தாம்பரம் அருகே காப்புக்காட்டில் கூண்டு வைத்து, ஆசிய மரநாய் பிடித்த நபரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் வனத்துறைக்குட்பட்ட மறைமலைநகர், கூடலூர் காப்புக்காடு பகுதியில் தாம்பரம் வனத்துறை ரேஞ்சர் கணேசன் தலைமையில் வனத்துறையினர் வழக்கம்போல கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கையில் சிறிய கூண்டோடு ஒரு நபர் தனியாக வந்துள்ளார். அவர், வனத்துறை அதிகாரிகளை கண்டவுடன் தப்பிக்க முயற்சித்தபோது, அவரை மடக்கி பிடித்த வனத்துறையினர், அவர் வைத்திருந்த கூண்டை சோதனை செய்தனர். அப்போது, அதில் அரிய வகையான ஆசிய மரநாய் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபு (35) எனவும், காப்புக்காடு பகுதியில் முயல் பிடிப்பதற்காக கூண்டு வைத்ததாகவும் அதில் மரநாய் சிக்கியதாகவும் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, அவரை கைது செய்த வனத்துறையினர் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  மேலும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட ஆசிய மரநாயை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க வனத்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: