போலீசார் வாகன சோதனையில் பைக் திருடிய வாலிபர் கைது

ஆவடி: அயப்பாக்கம் மதுக்கடை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை  திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆவடி அடுத்து அயப்பாக்கம் அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஜெயபால் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.  கடந்த 4ம் தேதி இவரது பைக்கை, இவரது அண்ணன் ஜெயசீலன் வாங்கிக்கொண்டு, அயப்பாக்கத்தில் உள்ள மதுகடைக்கு சென்றார். அங்கு,  பைக்கை  டாஸ்மாக் கடை வாசலில் நிறுத்திவிட்டு, மது வாங்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, நிறுத்தி வைத்திருந்த இடத்தில் வாகனத்தை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்தவர், அவரது தம்பி ஜெயபாலிடம் தெரிவித்தார்.  

இது குறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் ஜெயபால் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் மர்ம நபரை, சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து கிடைக்க பெற்ற சிசிடிவி காட்சி மூலமாக தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் திருமுல்லைவாயில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  அங்கு  சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.  அவர் அயப்பாக்கம் பவானி நகரை சேர்ந்த செந்தில்குமார் (35) என தெரிய வந்தது. தனியார் கம்பெனியில் லேத் வேலை செய்து வருகிறார். போலீசார் நடத்திய விசாரணையில் அய்யப்பாக்கம் மது கடைக்கு முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடியதை ஒப்புக் கொண்டார்.  இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: