சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை போக்சோவில் ரவுடி கைது

அம்பத்தூர்: அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (38, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்,  கடந்த 2 நாட்களுக்கு முன்  தனது 13 வயது மகளை காணவில்லை, என அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (22) என்பவர், சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து, செல்போன் சிக்னல் மூலம் போலீசார் கண்காணித்தபோது, புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் அருகே உள்ள ஒரு வீட்டில் சஞ்சயுடன் சிறுமி தங்கி இருப்பது தெரிந்தது. நேற்று அங்கு சென்ற போலீசார், இருவரையும் மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

அதில், சஞ்சய்க்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், குடும்ப தகராறு காரணமாக, அவரது மனைவி பிரிந்து சென்றதும், இவர் மீது, பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. முதல் திருமணத்தை மறைத்து சிறுமியை ஏமாற்றி காதலித்ததும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். மகளிர் போலீசார், சஞ்சய் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Related Stories: