பிரம்ம குமாரிகள் இயக்க பொன்விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிரம்ம குமாரிகள் இயக்கம்  மேலும் வளர்ச்சி பெற்று தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக  இருக்க வேண்டும். இந்த இயக்கத்தில் இணைந்து எந்தவித எதிர்பார்ப்பும்  இல்லாமல் சேவையாற்றி வரும் ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயா  என்று அழைக்கப்படும் பிரம்மா குமாரிகள்  இயக்கம்  கடந்த 1970ம் ஆண்டு  தமிழக மண்டலத்தில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் சேவையின் பொன்விழாவை முன்னிட்டு 2 நாட்கள் பிரமாண்ட விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 8, 9ம் தேதிகளில் இந்த விழா நடக்கிறது. முதல் நாள் விழா சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.

இரண்டாம் நாள் விழா  சுங்குவார்சத்திரம் பகுதியில் நடக்கிறது. முதல் நாள் விழாவில் பிரம்மா குமாரிகள் இயக்க கூடுதல் நிர்வாகத் தலைவர் ராஜயோகினி ஜெயந்தி, கூடுதல் செயலாளர் ஜெனரல் ராஜயோகி பிரிஜ்மோகன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். மேலும் தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, சிவி கணேசன், கே.ராமச்சந்திரன், ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். கல்பதரு என்ற புதிய திரைப்படத்தை  வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைக்கிறார். மாலையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற தலைப்பில் விழா நடத்தப்படும். அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், ஆவடி மு.நாசர், ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். பிரம்ம குமாரிகளின் தமிழக மண்டல சேவை பொறுப்பாளர் பீனா, தமிழகத்தில் பிரம்ம குமாரிகளின் சேவை பற்றி விளக்குகிறார்.

 9ம் தேதி நடக்கும் விழாவில் தமிழகத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரம்ம குமாரிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள்  பங்கேற்று உலக அமைதிக்கான  தியானம் செய்கின்றனர். அதன் தொடர்ச்சியாக ஒன்றிய துணை அமைச்சர் எல்.முருகன், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ஆந்திர மாநில  உயர் நீதிமன்ற  முன்னாள் தலைமை நீதிபதி  ஈஸ்வரய்யா  ஆகியோர் வாழ்த்திப் பேச உள்ளனர். அதன்பின் பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த சகோதரிகள், சகோதரர்கள் வாழ்த்திப் பேசுகின்றனர். மாலையில் நடக்கும் விழாவில் தெலங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்  சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை  வாழ்த்திப் பேசுகிறார்.  காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச சுவாமிகள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்திப் பேசுகின்றனர்.

பிரம்ம குமாரிகள் அமைப்பின் தமிழக சேவை பொன்விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். முதல்வரின் வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டில் பிரம்ம குமாரிகள் இ யக்கம் தனது பொன்விழாவை கொண்டாடுகிறது என்கிற  இனிய செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அவர்களின் சமூக, கல்வி ஆன்மிக சேவைக்கு  எனது பாராட்டுகள், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  சேவையாற்றி  மனித குல மேம்பாட்டுக்காக  பாடுபட்டு வரும் இந்த இயக்கம் 147 நாடுகளில் 6 ஆயிரம் கிளைகளை கொண்டு மகத்தான தொண்டாற்றி வருகிறது.  ஐக்கிய நாடுகள் சபையின்  அரசு சார்பற்ற நிறுவனமாகவும் அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மற்றும்  பொருளாதார  சமூக அறிவியல்  ஆலோசனைக் குழுவிலும் இடம் பெற்று மக்கள் பணி சார்ந்த மாபெரும் இயக்கமாக இது திகழ்கிறது.

நான் சென்னை மாநகராட்சி மேயராக பணியாற்றிய நேரத்தில் சென்னை குசலாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த இயக்கத்தின் இயக்குநராக இருந்த சகோதரி சிவகன்னியாவின் வாழ்த்துகளை பெற்றதும்  இன்றும் என் நினைவில் உள்ளது. இந்த இயக்கம்  மேலும் வளர்ச்சி பெற்று தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த இயக்கத்தில் இணைந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவையாற்றி வரும் ஆயிரக் கணக்கான சகோதர சகோதரிகளுக்கு  எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும், கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன், கேரள முதல் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.

* பிரம்ம குமாரிகள் இயக்கத்தில் இணைந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவையாற்றி வரும் ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கு  எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: