கடன் மறுசீரமைப்பு திட்டம் சீனாவுடன் இலங்கை பேச்சு: விரைவில் மோடியுடன் ரணில் சந்திப்பு

கொழும்பு: சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு   பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.இலங்கை அரசு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிடம் இருந்து ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 486 கோடியை இலங்கை வாங்கி உள்ளது. இதை தற்போது திருப்பி கொடுக்க முடியாமலும், அத்தியவாசிய பொருட்களை இறக்குமதி செய்ய அன்னிய செலாவணி இல்லாமலும் இலங்கை தவித்து வருகிறது. இதனால் கடனுதவி கோரி சர்வதேச நாணய நிதியத்தை நாடியது. பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ரூ.24,000 கோடி கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிபர்  ரணில் விக்கிரமசிங்கே நேற்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘‘சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் துவங்கி உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு வரும் 16ம் தேதி நடக்கிறது. அதன் பின்னர் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கும். பழங்காலத்தில் இருந்தே சீனா இலங்கைக்கு உதவி வருகிறது. இந்த சிக்கலான நேரத்திலும் உதவுவார்கள் என நம்புகிறேன்’’ என்றார்.இதற்கிடையே பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காண, பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விரைவில் டெல்லி வர உள்ளதாக அதிபர் ரணில் தெரிவித்து உள்ளார்.

22வது சட்டத்திருத்தம் மசோதா ஒத்திவைப்பு: அதிபரின் அதிகாரங்களை குறைத்து, நாடாளுமன்றத்துக்கே கூடுதல் அதிகாரம் வழங்கும் 22வது சட்டத்திருத்ததுக்கு சமீபத்தில் இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆளும்கட்சிக்குள்ளே சில எதிப்புகள் உள்ளதால், இந்த மசோதா மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: