கயத்தாறு அருகே பயங்கரம் டாஸ்மாக் பாரில் தகராறு செய்த பூ வியாபாரி வெட்டிக்கொலை: 5 பேர் கைது - மேலும் இருவருக்கு வலை

கயத்தாறு: கயத்தாறு அருகே டாஸ்மாக் பாரில் தகராறு செய்த பூ வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, மஞ்சநம்பிகிணறு கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் அழகுதுரை (28). பூ மொத்த வியாபாரி. ராஜேஸ்வரி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டு முன் அமர்ந்திருந்த அழகுதுரையை மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அழகுதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிந்து கழுகுமலை கரிசல்குளத்தை சேர்ந்த பட்டுராஜ், ஸ்டாலின், கனகராஜ், பாலமுருகன் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

இவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: பட்டுராஜ் ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை மாடசாமி, செட்டிக்குறிச்சியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அழகுதுரை, நண்பருக்கு மது வாங்குவதற்காக செட்டிக்குறிச்சி டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திக் கொண்டிருந்த கனகராஜ், தனக்கு மது வாங்குவதற்கு ரூ.200 தருமாறும், வீட்டில் வந்து தந்து விடுவதாகவும் அழகுதுரையிடம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த பார் உரிமையாளர் மாடசாமி உறவினர் ஸ்டாலின், கனகராஜிக்கு ஆதரவாக அழகுதுரையிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

பின்னர் கனகராஜை ஸ்டாலின் தனது டூவீலரில் மஞ்சநம்பிகிணறு கிராமத்தில் விடுவதற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது பாரில் நடந்த பிரச்னை குறித்து அழகுதுரை வீட்டில் சென்று தகராறு செய்துள்ளனர். ஸ்டாலின் உறவினர்களும் அங்கு வந்தனர். அப்போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஸ்டாலின், கனகராஜ் உள்ளிட்ட சிலர் அழகுதுரையை வெட்டிவிட்டு தப்பியதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து நிவாரணம் வழங்கவும், பிரச்னைக்கு காரணமான பாரை மூட வலியுறுத்தி அழகுதுரையின் உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அழகுதுரை மனைவி ராஜேஸ்வரிடம் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பழங்குடியின நல அலுவலர் பரிமளா வழங்கினார். அதன்பின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுச் சென்று அடக்கம் செய்தனர்.

Related Stories: