தமிழகத்தில் 8ம் தேதி வரை மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக தமிழத்தில் வளிமண்டல மேல் அடுக்கில் நீடித்து வரும் வளி மண்டல் காற்று சுழற்சியால் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நேற்றிரவு உருவான காற்றழுத்தம், வலுப்பெற்று இன்று காலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

இது சென்னை- ஆந்திர கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதால், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக 8ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை,  மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில் மேகமூட்டம் இருக்கும். 8ம் தேதி வரை மழை பெய்யும். மேலும் புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

Related Stories: