கொடுங்கையூரில் பரபரப்பு; கெமிக்கல் கம்பெனியில் வாயு கசிவு; 4 பேருக்கு மூச்சு திணறல்: 2 பெண்கள் சீரியஸ்

பெரம்பூர்: கொடுங்கையூரில் உள்ள கெமிக்கல் கம்பெனியில் நேற்று முன்தினம் இரவு சொல்யூஷன் இருந்த பேரலில் கசிவு ஏற்பட்டதில், 4 பேருக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை கொடுங்கையூர், லட்சுமி அம்மன் 3வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (50). கொடுங்கையூர், சாஸ்திரி நகர் விரிவாக்கம் பகுதியில் ரப்பர் சொல்யூஷன் தயாரிக்கும் தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு லட்சுமி அம்மன் நகர் 3வது தெருவை சேர்ந்த தேன்மொழி (58), கொருக்குப்பேட்டை அமுதவல்லி (55) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சொல்யூஷன் நிரம்பிய டிரம்மின் மூடியில் உடைப்பு ஏற்பட்டு கீழே கொட்டியது. இதனால் உரிமையாளர் வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் அமுதவல்லி, தேன்மொழி ஆகியோரை விஷவாயு தாக்கியது. அலறி கூச்சலிட்டனர். 3 பேரும் வெளியே ஓட முயன்றபோது, தரையில் கொட்டிய சொல்யூஷன் கால்களில் ஒட்டியது. சிறிது நேரத்தில் மயங்கினர். அவர்களின் சத்தம் கேட்டு, வெளியே நின்றிருந்த தேன்மொழியின் மகன் சுரேஷ் (38) என்பவர் ஓடி வந்தார். அவரது கால்களிலும் சொல்யூஷன் ஒட்டி விஷவாயு தாக்கியது. அவரும் மயங்கி விழுந்துள்ளார்.

தகவலறிந்து கொடுங்கையூர் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். பின்னர் 4 பேரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேன்மொழி, அமுதவல்லி ஆகியோருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் வெங்கடேசன், சுரேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தபோது, ரசாயன சொல்யூஷன் அடங்கிய டிரம்மை 2 பெண்களும் திறக்கும்போது, அது உடைந்து கீழே கொட்டியதால் ரசாயன வாயு அறை முழுவதும் நிரம்பியது. இதில் 4 பேருக்கும் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டது’ தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: