கோபி அருகே கழிவு நீரால் குடிநீர், விவசாயம் பாதிப்பு காகித ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்: தாசில்தாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுப்பு

கோபி: கோபி அருகே காகித ஆலை கழிவால் குடிநீர், விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள் அதனை நிரந்தரமாக மூடக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம்  கோபி அருகே உள்ளது கூகலூர் பேரூராட்சி. இங்குள்ள தண்ணீர்பந்தல் புதூரில் கடந்த 20 ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான காகித ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் தேக்கி  வைக்கிறார்கள்.  அருகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படும் சமயங்களில் இரவோடு இரவாக அதில் கழிவு நீரை கலந்து திறந்துவிடுகிறார்கள். இதனால் குடிநீர், விவசாயம் பாதிக்கப்படுவதாக இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இது தவிர மற்ற நாட்களில் ஆலைக்குள் 2 ஏக்கரில் தோண்டப்பட்ட ராட்சத குழியில் கழிவு நீரை தேக்கி வைக்கிறார்கள்.

இதனால் காகித ஆலை அருகே உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் கழிவு நீரால் பாதிக்கப்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கிராமக்கள் புகார் அளித்தனர். புகாரை அடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் ஆலை முன்பு திரண்டு ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது.

ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்ததும் கோபி தாசில்தார் ஆசியா மற்றும் போலீசார்  சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: