மொபைல் ஆப் மூலம் பெற்ற கடனை திரும்ப செலுத்தியும் மேலும் ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டல் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: மொபைல் ஆப் மூலம் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தியும் கூடுதலாக ரூ.50 ஆயிரம் கேட்டு ஊழியர்கள் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததால் மனமுடைந்த ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்தவர் நரேந்திரன் (23). பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தனது செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், மொபைல் ஆப் மூலம் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனுக்கு முறையாக வட்டியுடன் அசல் தொகையை ஆன்லைனிலேயே நரேந்திரன் கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் கடன் கொடுத்த நிறுவனத்தில் இருந்து வாங்கிய கடனுக்கு கூடுதலாக வட்டியுடன் ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறி அடிக்கடி நரேந்திரனுக்கு போன் செய்துள்ளனர்.

அதற்கு அவர், நான் வாங்கிய கடனை முழுமையாக வட்டியுடன் கட்டியும் எதற்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கேட்கிறீர்கள், என்று கேட்டுள்ளார். இதனால், அந்த நிறுவனத்தில் இருந்து பேசிய நபர்கள் மிகவும் ஆபாசமாக பேசியது மட்டும் இல்லாமல், நேற்று நரேந்திரன் தாய் வசந்தி செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு மிகவும் ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.

மொபைல் ஆப் மூலம் தனது மகன் கடன் வாங்கிய விவரம் அவரது தாய்க்கு தெரியாது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தனது மகன் நரேந்திரனிடம் அவரது தாய் வசந்தி கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த நரேந்திரன் நேற்று மதியம் வீட்டின் அறைக்கு சென்றார். இந்நிலையில் அவரது பெற்றோர் காலை 8.30 மணிக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். அங்கிருந்து, நரேந்திரனுக்கு வெகுநேரமாக போன் செய்தும் எடுக்கவில்லை.

இதனால் மருமகன் சதீஷை அனுப்பி பார்த்தபோது வீட்டில் நரேந்திரன் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த போலீசார் நரேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொபைல் ஆப் மூலம் கடன் பெற்ற விவகாரத்தில் ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: