தேவரின் தங்கக்கவசம் எடுக்க ஓபிஎஸ் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும்: வங்கி அதிகாரிகளிடம் ஓபிஎஸ் அணியினர் மனு

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தங்கக் கவசத்தை எடுக்க ஓபிஎஸ் கையெழுத்து போட அனுமதிக்கவேண்டும் என ஓபிஎஸ் அணியினர் வங்கி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சனையால், கடந்த ஜூலை 11ல் பொதுக்குழு நடந்தது. இதில், பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து, ஓபிஎஸ் நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். எனவே, கட்சி வரவு - செலவுகளை இவரே கவனிப்பாரென எடப்பாடி பழனிசாமி வங்கிகளுக்கு கடிதம் எழுதினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை வரும் 28 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிலைக்கு அணிவிப்பதற்கான தங்கக்கவசத்தை அதிமுக பொருளாளர், நினைவிட நிர்வாகி தங்கமீனாள் ஆகியோர், மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் இருந்து எடுத்துச்சென்று, தேவர் சிலைக்கு அணிவிப்பது வழக்கம். கடந்த வாரம் இபிஎஸ் அணியினர் வங்கி அதிகாரியிடம், ‘‘நாங்கள்தான் உண்மையான அதிமுக. தங்கக்கவசத்தை எடுக்க பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனை கையெழுத்து போட அனுமதிக்க வேண்டும்’’ என மனு கொடுத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்பி தர்மர், முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்டோர், நேற்று மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியின் கோட்ட துணை மேலாளர் அசோகன், முதுநிலை மேலாளர் ரேணுகா குப்தா ஆகியோரிடம் மனு கொடுத்தனர். அதில், கட்சியின் அதிகாரபூர்வ பொருளாளர் ஓபிஎஸ்தான். அவர்தான் இதுநாள் வரை கையெழுத்து போட்டு தங்கக்கவசத்தை எடுத்துள்ளார். வரும் தேவர் குருபூஜைக்காக தங்கக்கவசத்தை எடுக்க அவரிடம் கையெழுத்து பெற வேண்டும் என தெரிவித்திருந்தனர். மனுக்களை பரிசீலனை செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக வங்கியின் சட்ட திட்டப்படி ஆய்வு செய்து, யார் கையெழுத்து போடலாம் என தெரிவிப்பதாக கூறினர். பின்பு தர்மர் எம்பி, முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘வழக்கம்போல், தங்கக்கவசம் எடுக்கும் அதிகாரம் ஓபிஎஸ்சுக்கு உண்டு அதற்கான ஆவணத்தை வங்கி அதிகாரியிடம் வழங்கியுள்ளோம். மனுவை பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் கூறினர்’’ என்றனர்.

Related Stories: