சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைக்கு கூண்டில் அடைத்து சிகிச்சை

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகம் அய்யன்கொல்லி அருகே அத்திச்சால் பகுதியில் தனியார் காப்பி தோட்டத்தில் சிறுத்தை ஒன்று, சுருக்குகம்பி வலையில் சிக்கி தவிப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தொலைவில் நின்று பார்த்தனர். அப்போது சிறுத்தை ஒன்று சுருக்குகம்பியில் சிக்கி ஆக்ரோஷத்துடன் இருந்தது. பாதுகாப்பு கருதி அருகே செல்லாமல் வனத்துறையினர் முதுமலை வன உயிரின கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.

கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேற்று சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பல மணி நேர போராட்டத்திற்குப்பின் சிறுத்தையை மீட்டு முதுமலை பகுதிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.இதுகுறித்து கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் கூறுகையில், ‘‘சுமார் 5 வயது மதிக்கதக்க பெண் சிறுத்தை காபி தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் பின்னங்கால்கள் சிக்கியதில் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளது. சிறுத்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்,’’’ என்றார்.

சிறுத்தை சுருக்கு கம்பியில் சிக்கியது தொடர்பாக தோட்ட உரிமையாளர் மேத்தியூ (65) என்பவர் தலைமறைவாக இருந்து வரும் நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய அவரது மருமகன் அனீஸ் என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: