தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகளை குறைக்க லேசர் ஒளிக்கற்றை மூலம் விழிப்புணர்வு-போக்குவரத்து துறை நடவடிக்கை

தர்மபுரி : தொப்பூர் கணவாய் வழியாக தினசரி 40 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. இப்பகுதியில் இரவு, அதிகாலை நேரத்தில் விபத்தை குறைக்க, தர்மபுரி போக்குவரத்து துறை சார்பில், லேசர் ஒளிக்கற்றை பதிவு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள தொப்பூர் கணவாய், மலைக் குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த கணவாய் வழியாக கன்னியாகுமரி-காஷ்மீர் வரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், அங்கிருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கும் சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய சாலையாக இது உள்ளது. டோல்கேட்டில் இருந்து தொப்பூர் இரட்டை பாலம் வரை 8 கி.மீ தூரம் சாலை இறக்கமாகவும், வளைந்தும் செல்கிறது.

தொப்பூர் கணவாயில் 4 கி. மீட்டர் தொலைவுக்கு மிகவும் அபாயகரமான வளைவுகள் உள்ளது. இதன் காரணமாக, அடிக்கடி விபத்துகள் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. தொப்பூர் கணவாயில் சாலை விபத்து ஏற்பட்டால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது.

கணவாய் பகுதியில் விபத்துக்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நவீன கருவிகள் அமைக்கப்பட்டு, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்படுகிறது. இதனிடையே, கடந்த மாதம் முதல், தொப்பூர் கணவாய் பகுதியில் சாலை விபத்து நடக்கும் 2 இடங்களில், கோ ஸ்லோ என்ற வாசகத்தின் பதிவுகளை லேசர் ஒளிக்கற்றை மூலம் சாலையில் விழும் படியாக செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து லாரி டிரைவர்கள் கூறுகையில், ‘தொப்பூர் கணவாயில், எஸ் வடிவ குறுகிய வளைவு சாலையாக உள்ளதாலும், சாலையில் போதுமுான கிரிப் தன்மை இல்லாததாலும் விபத்து நடக்கிறது. வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தி, சற்று இளைப்பாறி விட்டு ஒரேநேரத்தில் 20 வாகனங்கள் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொப்பூர் கட்டமேட்டில் இருந்து, மேச்சேரி பிரிவு சாலை வரை, ஒரே நேரான சாலை அமைத்தால் 99 சதவீதம் சாலை விபத்துகள் நடக்காது,’ என்றனர்.

 இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தொப்பூர் கணவாய் வழியாக தினசரி 40 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. இதில் கனரக வாகனங்கள் மட்டும் 15 ஆயிரம் கடக்கின்றன. விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து, விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலத்தில் இருந்து முதன்முறையாக தொப்பூர் கணவாயில் வாகனத்தை ஓட்டி வரும் டிரைவர்களே, அதிக விபத்தை ஏற்படுத்துகின்றனர். ஒருமுறைக்கு மேல் வந்து சென்ற டிரைவர்கள் விபத்து ஏற்படுத்துவதில்லை.

எனவே, டோல்கேட் மற்றும் எஸ் வடிவ வளைவுகளில், ஒலிபெருக்கியில் அபாய வளைவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். கடந்த மாதம் முதல் இரண்டு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தெரியும் வகையில், கோ ஸ்லோ என்ற வாசகத்தின் பதிவுகளை, லேசர் ஒளிக்கற்றை மூலம் சாலையில் விழ வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,’ என்றனர்.

Related Stories: