திருப்பதியில் 6ம் நாள் பிரமோற்சவம் அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி உலா: இன்று சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் அருள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்று காலை பக்தர்களின் கோவிந்த முழக்கத்துடன் மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில் நான்கு மாட வீதியில் பவனி வந்து அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அதன்படி 5ம் நாளான நேற்று முன்தினம் இரவு முக்கிய நிகழ்வான கருடசேவை நடந்தது. இதைத்தொடர்ந்து 6ம் நாளான நேற்று காலை த்ரேதா யுகத்தில் தனக்கு சேவை செய்த பக்தன் அனுமந்தனை வாகனமாக கொண்டு (அனுமந்த வாகனம்) ஸ்ரீராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4 மணியளவில் 32 அடி உயரமுள்ள பாயும் குதிரையுடன் கூடிய தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரமோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் சுவாமி அருள்பாலிக்கிறார்.

Related Stories: