இரவு நேரங்களில் கடைகளில் திருடிய வெளி மாநிலத்தினர் 4 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இரவு நேரங்களில் கடைகளில் திருடிய வெளிமாநிலத்தினர் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரத்தில் இரவு நேரங்களில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் நேற்று முன்தினம் இரவு ரயில்வே சாலையில் உள்ள 2 கடைகளில் ஷட்டர் பகுதியை துாக்கி வழி ஏற்படுத்தி திருடிய சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

அதன் அடிப்படையில் இரவு நேரங்களில் காஞ்சிபுரம் நகர் பகுதியில் விஷ்ணு காஞ்சி போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரங்கசாமி குளம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு 4 பேர் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மீது சந்தேகப்பட்ட போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னதால் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு செட்டி (40), கிருஷ்ண யாதவ் (23), கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த விஜயகுமார் (44), கணேஷ்மாலி (42) என தெரியவந்தது. மேலும் இந்த 4 பேரும் காஞ்சிபுரத்தில் பாத்திரக் கடையில் ரூ.30 ஆயிரம் மற்றும் ரயில்வே சாலையில் 2 கடைகளில் ரூ.5,120 திருடியதை ஒப்பு கொண்டனர். எனவே 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: