வறுமை காரணமாக கோயிலில் பிச்சை எடுக்கும் அரசு அதிகாரிக்கு 6 வாரத்தில் ஓய்வூதிய பலன்; ஐகோர்ட் கிளை கெடு

மதுரை: வறுமையால் பிச்சை எடுக்கும் அரசு அதிகாரிக்கு  பணப்பலன்களை 6 வாரத்தில் வட்டியுடன் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த கோபால் என்ற  முதியவர், யாசகம் பெற்று வந்தார். அப்போது அவர், சிலரிடம் அரசுத்துறையில் பணியாற்றியதாகவும், ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் கிடைக்காததால் வறுமை காரணமாக கோயிலில் பிச்சையெடுத்து வாழ்வதாக தெரிவித்துள்ளார். இதையறிந்த  ஒருவர் மூலம் கோபால், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் குடும்பத்தினர் வசிக்கின்றனர். நான் வேளாண் உதவி அதிகாரியாக பணியாற்றி 2006ல் ஓய்வு பெற்றேன்.

அப்போது கூட்டுறவு சங்கத்தில் எனது கடன் நிலுவையில் இருந்ததால், எனக்கு ஓய்வூதியம், பணப்பலன்களை வழங்கவில்லை. இதனால் எனது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. இதனால் படிப்பை தொடர முடியாமல் எனது மகன் தற்கொலை செய்து கொண்டார். எனது 2 மகள்கள் 40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாமல் கூலி வேலைக்கு செல்கின்றனர். விரக்தி அடைந்த நான், வீட்டை விட்டு வெளியேறி கோயில்களில் பிச்சை எடுத்து பிழைக்கிறேன். எனவே எனது குடும்ப சூழ்நிலை கருதி, எனக்கு சேர வேண்டிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் 74 வயதுடையவர். இவர் பல்வேறு துயரங்களை அனுபவித்துள்ளார்.

தஞ்சை மாவட்ட வேளாண்மை உதவி அலுவலர்கள் கூட்டுறவு சேமிப்பு சங்கத்தில் கடன் பெற்றுள்ளார். கஅதை சரியான நேரத்தில் செலுத்தாததால், நிலுவைத்தொகை ரூ.5,37,730 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்த தொகையை செலுத்தி விடுவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஓய்வூதிய விதி 61ன்படி ஓய்வூதியத் திட்டத்தைத் தயாரித்து அதை இறுதி செய்வது, உரிய அதிகாரியின் கடமை. எனவே மனுதாரருக்கு சேர வேண்டிய ஓய்வூதியத்தொகையில் கடன் தொகையை கழித்து, மீதியை உரிய வட்டியுடன் 6 வாரத்தில் அதிகாரிகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: