சென்னை பாப்புலர் பிரண்ட் அலுவலகத்துக்கு ‘சீல்’; பெயர் பலகை அகற்றம்

சென்னை: சென்னை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் யாரும் உள்ளே நுழையாதபடி பூட்டும் போடப்பட்டது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டுவதாகவும், பயிற்சி முகாம்கள் நடத்தி தீவிரவாத இயக்கங்களுக்கு ஆள் சேர்ப்பதாகவும் குற்றம்சாட்டி அந்த அமைப்புக்குச் சொந்தமான தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகிய இடங்களில் கடந்த மாதம் 22 ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் கூட்டு இயக்கங்களைச் சேர்ந்த 11 பேர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அதில் 8 பேர் புழல் சிறையிலும் மீதமுள்ள 3 பேர் மேல் டெல்லிக்கு விமானத்திலும் அழைத்து சென்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உட்பட 5 அமைப்புகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்பட தடைவிதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு சார்பிலும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தமிழ்நாட்டில் இயங்க தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று  காலை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த கட்டடத்தின் உரிமையாளர்கள் அனீஃபா மற்றும் ஜாகீர் ஹுசைன் ஆகியோரை நேரில் வரவழைத்து கட்டடத்தில் உள்ள எந்த பொருளுக்கும் சேதம் ஏற்படுத்தவில்லை என்பதை காட்டி கையொப்பம் பெற்றனர். பின்னர் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகத்தின் பெயர் பலகையை அகற்றி அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார்.

Related Stories: