மகளிர் ஆசிய கோப்பை டி20; ஜெமிமா அதிரடியில் இந்தியா அதிரடி வெற்றி

சில்ஹட்: ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடரில், இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா 41 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

வங்கதேசத்தில் உள்ள சில்ஹட் நகரில் 8வது மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் நேற்று தொடங்கியது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற  இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா 6 ரன், ஷபாலி வர்மா 10 ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி 4 ஓவரில் 23 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், ஜெமீமா ரோட்ரிக்ஸ் - கேப்டன் ஹர்மன்பிரீத் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்தது. ஹர்மன்பிரீத் 33 ரன் விளாசி வெளியேறினார்.

அதிரடியாக விளையாடி 38 பந்தில் அரை சதம் அடித்த ஜெமிமா, 76 ரன் (53 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அத்தபத்து பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ரிச்சா கோஷ் 9, பூஜா வஸ்த்ராகர் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. ஹேமலதா 13, தீப்தி ஷர்மா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் ஒஷாதி ரணசிங்கே 3, சுகந்திகா குமாரி, சமாரி அத்தபத்து தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 18.2 ஓவரில் 109 ரன் மட்டுமே எடுத்து 41 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹாசினி பெரேரா அதிகபட்சமாக 30 ரன், ஹர்ஷிதா 26, ஒஷாதி 11 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.

இந்திய பந்துவீச்சில் தயாளன் ஹேமலதா 3, பூஜா வஸ்த்ராகர், தீப்தி ஷர்மா தலா 2, ராதா யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர். ஜெமிமா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை  மலேசியாவுடன் மோதுகிறது. வங்கதேசம் வெற்றி: முன்னதாக நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்  வங்கதேசம் - தாய்லாந்து அணிகள்  மோதின. தாய்லாந்து 19.4 ஓவரில் 82 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம்  11.4 ஓவரிலேயே ஒரு விக்கெட் மட்டும் இழந்து 88 ரன் எடுத்து வென்றது. ஆட்டநாயகி  ஷமிமா சுல்தானா 49 ரன் (30 பந்து, 10 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். ஃபர்கானா ஹோக்யூ 26, கேப்டன் நிகர் சுல்தானா 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Related Stories: