விழா காலங்களில் அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு; ஆம்னி பஸ்களில் 10 முதல் 22% வரை கட்டணம் குறைப்பு: புதிய பட்டியல் வெளியீடு

சென்னை: விழா காலங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து ஆம்னி பேருந்துகளில் 10 முதல் 22% வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நேற்று புதிய கட்டண பட்டியலை வெளியிட்டனர். விழாக்காலங்களில் எழும் பேருந்து கட்டணப் பிரச்னை குறித்து, கடந்த 27ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். ஓரிரு நாட்களில் அதிகபட்ச கட்டணத்தை முறைப்படுத்தி பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பார்கள் என கூறினார். இந்நிலையில், ஆம்னி பேருந்துக்கான அதிகபட்ச கட்டண பட்டியலை போக்குவரத்து துறை ஆணையர் நிர்மல் ராஜிடம், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சமர்ப்பித்தனர்.

அதன்படி, ஏற்கனவே இருந்த அதிகபட்ச கட்டணத்தை விட 10 முதல் 22 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் கூறும்போது, ‘‘நாங்கள் சமர்ப்பித்து இருக்கும் பேருந்து கட்டணத்தில் குளிர்சாதன வசதியில்லா பேருந்துகள், குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகள், வால்வோ பேருந்துகளில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டணம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதைவிட அதிகமாக வசூலிப்போர் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். குறைந்தபட்ச கட்டணத்தை சம்பந்தப்பட்ட பேருந்தின் உரிமையாளர்களே நிர்ணயிப்பார்கள்’’ என்றனர்.

Related Stories: