‘அச்ச, அம்மே ’ வாசகங்களோடு நெல்லை அருகே கேரள தொடர்புடைய புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

நெல்லை: நெல்லை அருகே வீரளப்பெருஞ்செல்வி கிராமத்தில் கேரள தொடர்புடைய பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பாளையங்கோட்டை  அருகே 480 ஆண்டுகளுக்கு முற்பட்ட முன்னீர்பள்ளம் செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டதன் வாயிலாக முன்னீர்பள்ளம் கேரள மன்னன் பூதல வீர உன்னி கேரள வர்மன் ஆட்சியின் கீழ் இருந்தது உறுதி செய்யப்பட்டு இருந்தது.

 இந்நிலையில் பாளை அருகே வீரளப்பெருஞ்செல்வி கிராமத்தில் பழமையான கல்வெட்டு ஒன்று இருப்பதாக வரலாற்று பண்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மைய இயக்குனர் மாரியப்பன் இசக்கி மற்றும் நிர்வாகிகள் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள குளத்தின் கரையை ஒட்டி விநாயகர் கோயில்  எதிரில் தனி கல்லில் கல்வெட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கல்வெட்டு தூய்மை செய்யும் பணி தொடங்கியது. கல்வெட்டில் உள்ள வாசகங்கள் வரலாற்று பண்பாட்டு மையத்தால் கண்டறியப்பட்டன.

அதன்படி கல்வெட்டில், ஊரின் பெயர் வீரகேரள பெருஞ்செல்வியான ஞானபிரகாச நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்தது. கல்வெட்டு வாயிலாக இந்த ஊர் கேரளாவை ஆட்சி செய்த திருவிதாங்கூர் மன்னன் பூதல வீர உன்னி கேரள வர்மன் பெயரால் வீரகேரள பெருஞ்செல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஊர் கேரள மன்னன் ஆட்சியில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் கல்வெட்டு அமைந்த கோவிலின் இடது பக்க தூணில் ‘அச்ச அம்மே’ என்ற வாசகம் காணப்படுகிறது. மலையாளத்தில் அச்சன் என்றால்  தந்தையையும், அம்மே என்பது தாயையும் குறிக்கும் சொல்லாகும்.

இதுகுறித்து வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் இசக்கி கூறுகையில்:

வீரகேரள பெருஞ்செல்வியில் உள்ள கல்வெட்டு வாயிலாக நெல்லை மாவட்ட கிராமங்களுடன் கேரளத் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. கல்வெட்டுக்கு கீழ் பகுதியில் சில குறியீடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கல்வெட்டு ஆழமாக மண்ணில் புதைந்து இருப்பதால் இதனை அடுத்த கட்ட ஆய்வில்தான் குறியீடுகளுக்கான விளக்கங்களை தெரிந்து கொள்ள முடியும். ஞானபிரகாச நல்லூர் என்பதற்கான காரணம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.’’ என்றார்.

Related Stories: