கடமலைமயிலை ஒன்றியத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வருசநாடு: கடமலை மயிலை ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை மயிலை ஊரா ட்சி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி பகுதிகள் அனைத்திற்கும் மூல வைகை ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்காலிகமாக மூல வைகை ஆற்றில் உள்ள உறைகிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகமும் குடிநீர் வழங்குவதில் ஒவ்வொரு நாளும் திணறி வருகின்றன.

மேலும் உறைகிணறுகள் அனைத்தையும் தூர்வாரி முறையாக குடிநீர் வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில இடங்களில் உறை கிணறுகளை தூர்வாரியபின்பு குடிநீர் பஞ்சம் சிறிதளவு நீங்கியது. ஆனால் தற்போது கோடை மழை பற்றாக்குறையின் காரணமாக கடமலை மயிலை ஒன்றியத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் குடிநீர் குடிப்பதற்கும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படையும் நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து கடமலைக்குண்டு கிராமவாசிகள் கூறுகையில், கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் மூல வைகை ஆற்றுப்பகுதியை நம்பி உள்ளன.

தற்பொழுது ஆற்றில் நீர் வரத்து இல்லாமல் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேனி மாவட்ட ஆட்சியரும் ஊராட்சி ஒன்றிய நிர்வாக அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:

கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் பல இடங்களில் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால் மட்டுமே நிரந்தர குடிநீர் பஞ்சம் நீக்க முடியும். தமிழக அரசும் தேனி மாவட்ட நிர்வாகமும் புதிய தடுப்பணை கட்டுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories: