உரிய ஆவணங்கள் இல்லாததால் வேலூர் அருகே 10 கோடி ரூபாய் பறிமுதல்: போலீஸ் விசாரணை

வேலூர்: வேலூர் அருகே காரில் எடுத்துச் செல்லப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய போலீஸார் நேற்று இரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு காரில் இருந்து லாரிக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அங்கு சென்ற காவலர்கள் அவர்களிடம் சாதாரணமாக விசாரித்தனர். ஆனால் போலீஸாரைக் கண்டதும் அவர்கள் பதற்றமடைந்தனர். மேலும் போலீசாரின் கேள்விகளுக்கு  முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.  இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பார்சல்களைப் பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அதில், கட்டுக் கட்டாக பணம் இருப்பது தெரிய வந்தது. பணம் லாரி மூலம் கேரளாவுக்கு கடத்தப்பட இருப்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் லாரி மற்றும் காரை பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.  

பிரித்து பார்த்தபோது அதில் மொத்தம் பத்து கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், பணத்தை எடுத்து வந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். இந்த பணம் சென்னையிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்படும் ஹவாலா பணமா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: