கெங்கவல்லி அருகே 4 பசுக்களை திருடிய வழக்கில் வாலிபர் கைது: அதிமுக பிரமுகரின் பேரன் உள்பட 2 பேருக்கு வலை

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே 4 பசுக்களை திருடி விற்க முயன்ற வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில், கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள ஆணையம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் கந்தசாமி, ராஜேந்திரன். இவர்கள் பசுக்களை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த 4 பசுக்கள் திருடு போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மாடுகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் மாடுகளை திருடிய ஆசாமிகள் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வியாபாரியிடம் விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து விவசாயிகள் மணப்பாறைக்கு விரைந்து சென்றபோது, விவசாயிகளை பார்த்ததும் திருட்டுக் கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு வாகனத்தில் தப்பியோடி விட்டனர். மற்றொரு மினிலாரியில் இருந்த 4 மாடுகளை விவசாயிகள் மீட்டனர். இதனிடையே இந்த மாடுகள் திருட்டில் அதிமுகவைச் சேர்ந்த கெங்கவல்லி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் மருதமுத்துவின் பேரனும், சத்யமூர்த்தி என்பவரது மகனுமான கரிகாலன் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மருதமுத்துவின் வீட்டின் முன் கந்தசாமி, ராஜேந்திரனின் உறவினர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் கடந்த சில மாதங்களில் மாடு, கோழி, ஆடுகளை திருட்டில் பறிகொடுத்தவர்களும் திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கெங்கவல்லி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

தொடர்ந்து நேற்றிரவு ஆணையம்பட்டியில் மாடு திருட்டு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 50க்கும் மேற்பட் டோர், கெங்கவல்லி காவல்நிலையத்திற்கு சென்று முறையிட்டனர். அப்போது, அங்கிருந்த போலீசார் உரிய பதில் தெரிவிக் காததால், பொதுமக்கள் ஆணையம்பட்டி- தெடாவூர் சாலையில், சாவடி பகுதியில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், டிஎஸ்பி ராமச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆகியோர் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மாடுகளை திருடியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே மாடுகளை திருடியதாக கருப்பையா (27), கரிகாலன், பாலாஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள கெங்கவல்லி போலீசார் கருப்பையாவை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட 4 பசுக்களும் உரிமையாளர்களான ராஜேந்திரன் மற்றும் கந்தசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: