உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் கலக்கும் நகராட்சி கழிவுநீர்

சுவாமியார்மடம்: பேரூராட்சிகளின் வடிகால்களில் கலக்கும் வீட்டு கழிவுநீரால்  நீர்நிலைகள் மாசடைந்து வருகின்றன. இதை தடுக்கும் பொருட்டு, குமரி மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும் வீடுகளில் இருந்து வடிகால்களில் கழிவுநீரை விடும் குழாய்கள் சிமெண்ட் கலவைகளால் அடைக்கப்பட்டன.

இந்த நிலையில் உண்ணாமலைக்கடை பேரூராட்சி செயல் அலுவலர்  பிரதாபன்  நடவடிக்கை மேற்கொண்டு, வீடுகளில் இருந்து கழிவுநீர் வடிகால்களில் கலப்பது தடுக்கப்பட்டது. ஆனால் உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு அருகே உள்ள குழித்துறை நகராட்சியில் இருந்து கழிவுநீர் சர்வ சாதாரணமாக இங்கு பாய்ந்து வருகிறது. இதை தடுக்க பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குழித்துறை நகராட்சி கழிவுநீர் பேரூராட்சி பகுதியில் பாய்வதால் இங்குள்ள நீர்நிலைகள், குடிநீர் கிணறுகள் மாசடைகின்றன. மேலும் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாவதால்  பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம், உள்ளாட்சி மற்றும்  சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: