பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரேபியாவின் பிரதமராக நியமனம்

ரியாத்: உலகில்  மன்னராட்சி அமலில் உள்ள நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இந்நாட்டின்  அரசராக 86 வயதான சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் இருக்கிறார். இவர்,  இந்தாண்டில் மட்டும் அவர் உடல் நல குறைவால் 2 முறை மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார். இச்சூழலில் அவரது மகனான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்,  நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நாட்டின்  துணை பிரதமராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம்  கொண்டவர். நாட்டின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து இந்த  அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாதுகாப்பு துறையின் இணை அமைச்சராக இருந்த  முகமது பின் சல்மானின் இளைய சகோதரர் காலித் பின் சல்மான், பாதுகாப்பு

துறை  அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை சவூதி அரேபிய பத்திரிகை  நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதையடுத்து, வெளியுறவு துறை அமைச்சராக  இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத், நிதியமைச்சராக முகமது அல்-ஜடான்,  வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சராக காலித் அல்-பாலிஹ் ஆகியோர்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது முகமது பின் சல்மான் பிரதமராக  அறிவிக்கப்பட்டிருந்தாலும், அமைச்சரவை கூட்டங்களுக்கு அரசர் சல்மான் பின்  அப்துல்அஜிஸ் அல்தான் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது  பின் சல்மானை பொறுத்தளவில், அவர் நாட்டை இஸ்லாமிய உலகின் இதயமாகவும்,  முதலீட்டு அதிகார மையமாகவும் மாற்றவும் தொடர்ந்து முயன்று வருகிறார்.

இதனை  சாத்தியப்படுத்த ‘விஷன் 2030’ எனும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார்.  இதன் மூலம் சவுதி அரேபியா 3 கண்டங்களை இணைக்கும் மையமாக மாறும் என  எதிர்பார்க்கப்படுகிறது. முகமது பின் சல்மான், அதிகார பொறுப்புக்கு  வந்ததிலிருந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர் வரை  அந்நாட்டில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் முகமது  பின் சல்மான் இதற்கான அனுமதியை கொடுத்தார். மேலும், இதர மதத்தினர் மீதான  ஆதிக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் என சர்வதேச அரசியல்  ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: