நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க வேண்டும்-உலக சுற்றுலா தின விழாவில் கலெக்டர் வேண்டுகோள்

ஊட்டி : சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் இயற்கை எழில் பாதிக்காத வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்து நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டார். சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் செல்கின்றனர். இதனால், சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலா தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை காண வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி உலக சுற்றுலா தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலக சுற்றுலா தினத்தன்று ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை பாரம்பரிய முறைப்படி வரவேற்பது வழக்கம். அதேபோல், ஊட்டியில் நேற்று மலை ரயிலில் வந்த சுற்றுலா பயணிகளை சுற்றுலாத்துறை அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். தொடர்ந்து ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், சுற்றுலா அலுவலர் உமாசங்கர் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர் அம்ரித் பேசியதாவது:  சுற்றுலா வளர்ச்சிக்காக உலகச் சுற்றுலா அமைப்பு 1970ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி உலக சுற்றுலா தினமாக அறிவித்தது. அன்று முதல் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தொழில் மிகவும் நலிவடைந்தது. அதனை மறு சீராய்வு செய்து மேம்படுத்த இந்த ஆண்டு சுற்றுலா மறு சிந்தனை என்ற கருப்பொருளை உலக நாடுகளுக்கு உலக சுற்றுலா நிறுவனம் அறிவித்துள்ளது. சுற்றுலா என்பது மன மகிழ்வு, ஓய்வு, மத, குடும்பம் அல்லது வணிக நோக்கங்களுக்காகவும், மருத்துவம், சாகச விளையாட்டு, கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகிய காரணங்களுக்காவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேற்கொள்ளும் பயணமாகும்.

ஒருவரின் வழக்கமான வாழ்க்கை சூழலில் இருந்து வெளியிடங்களுக்குச் சென்று தங்குபவரை சுற்றுலா பயணிகள் என வரையறுக்கிறது. பொதுவாகுக ஒரு நாட்டிற்குள்ளோ அல்லது நாட்டின் வெளியிலோ பயணிப்பது சுற்றுலா என கருதப்படுகிறது. மலை வாசஸ்தலங்கள் அனைத்திற்கும் ஊட்டிஅரசியாக விளங்குகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அதிகளவு அளவில் சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர்.

சிறப்பு வாய்ந்த சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் இயற்கை எழில் பாதிக்காத வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்து இந்த மாவட்டத்ைத பாதுகாத்திட வேண்டும். இங்குள்ள பொதுமக்களும், சுற்றுலா வர்த்தக பிரமுகர்களும் சுற்றுலா பயணிகளை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். அவர்கள் இயற்கை வனங்களை கண்டு களிக்க ஒத்துழைப்பு அளிப்போம். சுற்றுா பயணிகள் மூலம் இம்மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை மென்மேலும் மேம்படுத்துவோம்.இவ்வாறு கலெக்டர் அம்ரித் பேசினார்.

இவ்விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா வழிக்காட்டிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: