தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தத்ரூபம் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க தென்காசியில் செயல் விளக்கம்

தென்காசி : தென்காசியில் கட்டிடம் இடிந்து விழுந்த சமயத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தத்ரூபமாக செய்து காட்டினர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என பலருக்கு பேரிடர் காலங்களில் மீட்புகள் குறித்த விழிப்புணர்வை வழங்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புகுழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தால் அதில் மீட்பு பணிகள் மற்றும் சிக்கியுள்ளவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நடத்தினர்.

இது போன்ற நடவடிக்கைகளை எவ்வாறு செய்வார்களோ, அதே போல் தத்ரூபமாக நடித்து காட்டினார்கள். உள்ளே நுழையும் முன் எடுக்கப்படும் நடவடிக்கைகள், உள்ளே சென்றதும் மீட்பு பணிகள் எவ்வாறு செய்யப்படுகிறது, அவசர காலத்தில் மாடியில் இருந்து பாதிப்படைந்தவர்களை மீட்பது குறித்தும் எளிதாக விளக்கியதுடன் பேரிடர் காலங்களில் எவ்வாறு மக்களுக்கு மாணவர்கள் உதவலாம் என்பது குறித்தும் விழிபுணர்வு நிகழ்ச்சி செய்முறையாக நடத்தினர்.

இதில் மாடியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை கயிறு மூலம் இறக்கிய காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தேசிய மீட்பு படையின் சாகசத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் தென்காசி தாசில்தார் ஆதிநாராயணன், தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் கவிதா, தேசிய பேரிடர் மீட்பு படை டீம் கமாண்டர் பங்கஜ் குமார் சர்மா, ராஜன், ஐயப்பன் பங்கேற்றனர்.

Related Stories: