ஐஓபி ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மர் வைத்த வழக்கு வாலிபரின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய கேமரா பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவலை திருடியதாக கிளை மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  விசாரணையில், ஸ்கிம்மர் பொருத்தியது இளைஞர் ஆனந்த்குமார் மற்றும் அவரது தந்தை மனோகர் என தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி மனோகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் தரப்பில், தனது மகனின் செயல் குறித்து தனக்கு தெரியாது.

வங்கி அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று இறக்கிவிட்டு மட்டுமே வந்தார் என்று வாதிடப்பட்டது. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்கிம்மர் வைத்த ஆனந்த்குமார் தலைமறைவாகிவிட்டார். விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட உள்ளது என்று தெரிவித்தார்.  மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அதன்படி 20 லட்ச ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துகள் குறித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உத்தரவாதம் தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை, மாலையில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

Related Stories: