திருவாரூரில் கனமழை 25,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மூழ்கியது

திருவாரூர்: திருவாரூரில் கனமழையால் 25 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த 26ம் தேதி நள்ளிரவு முதல் நேற்றுமுன்தினம் காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலையும் மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை கொட்டியது. திருவாரூர், நன்னிலம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேளாண்மைத்துறையினர் பயிர் சேதங்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திட்டச்சேரி, திருமருகல் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி பகுதியில் நேற்று காலை 6 மணி முதல் சாரல் மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை தொடர்ந்து 2 மணி நேரமாக பெய்தது.

அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கீடு செய்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். கடந்த ஆண்டு சம்பா பயிருக்கு இதுவரையில் இழப்பீடு கிடைக்காததால் விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர் என்றார்.

Related Stories: