கம்பியால் அடித்து காதலியை கொன்ற வாலிபர் கைது

காரைக்குடி: காரைக்குடி அருகே காதலியை இரும்புக்கம்பியால் அடித்து கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மாத்தூர் வேல்முருகன் குடியிருப்பை சேர்ந்தவர் சினேகா (22). இவர், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இலுப்பக்குடி புதுகுடியிருப்பை சேர்ந்தவர் கண்ணன் (29). இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கண்ணன் பெண் கேட்க சினேகாவின் வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவரது அக்காவிற்கு திருமணம் செய்து வைத்த பின்னர் பேசி கொள்ளலாம் என சினேகா குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட பிரச்னையில் சினேகாவின் தாத்தாவை கண்ணன் கீழே தள்ளிவிட்டுள்ளார்.  இதுதொடர்பாக காவல்நிலையத்தில் சினேகா குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று  முன்தினம் பிற்பகல் சினேகாவிற்கு போன் செய்த கண்ணன், அங்குள்ள ரேஷன் கடை அருகே வருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து டூவீலரில் சினேகா ரேஷன் கடை அருகே வந்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணன், மறைத்து வைத்திருந்த கம்பியை எடுத்து சினேகாவின் தலையில் பலமாக தாக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தலையில் பலத்த காயமடைந்த சினேகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்ணனை தேடி வந்தனர். தப்பியோடிய கண்ணனை சாக்கோட்டை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

Related Stories: