மழை விட்டும் தூறல் நிற்காத மாதிரி கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட ஒர்க் ப்ரம் ஹோம் தொடரும் நிலை: மன அழுத்தம் அதிகரிப்பு

பெரம்பூர்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்றளவும் அந்த மாற்றத்தில் இருந்து வெளிவர முடியாமல் பலரும் சிக்கித் தவித்து வருகின்றனர். உயிர்களை இழந்து, உடமைகளை இழந்து, செய்து வந்த தொழிலை இழந்து இவ்வாறு பல்வேறு இழப்புக்களை கொரோனா என்ற ஒரு வைரஸ் ஏற்படுத்தியது. குறிப்பாக, மனிதர்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் வேலை செய்யும் சூழ்நிலைகளையும் முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறது. கடந்த இரண்டரை வருடங்களாக கொரோனா பாதிப்பில் இருந்த மக்கள் ஓரளவிற்கு தற்போது வெளியே வர தொடங்கி, நிலைமை ஓரளவிற்கு சீராகி உள்ளது. இருந்தபோதிலும் இன்னும் முழுமையாக அந்த பாதிப்பில் இருந்து வெளியே வரவில்லை என்பது அவ்வப்போது மருத்துவர்கள் தரும் எச்சரிக்கை வாயிலாக நம்மால் உணர முடிகிறது.

அந்த, வகையில் சென்னை போன்ற பெருநகரங்களில் கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை (ஒர்க் ப்ரம் ஹோம்) பெரு நிறுவனங்கள் குறிப்பாக ஐடி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியது. காலையில் அவசர அவசரமாக எழுந்து குளித்துவிட்டு, காலை உணவை முடித்துவிட்டு, மதியம் உணவை கட்டிக்கொண்டு, பேருந்து அல்லது ரயிலை பிடித்து 1 மணி நேரம், 2 மணி நேரம் பயணம் செய்து உருப்படியாக அலுவலகத்திற்கு சென்று கஷ்டப்பட்டு தங்களது வேலைகளை செய்து வந்த நபர்கள், வீட்டில் தாமதமாக எழுந்து முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு அப்படியே தங்களது லேப்டாப்பில் வேலை செய்துவிட்டு, எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது சென்று குளித்து மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டு மிகவும் சந்தோஷமாக தங்களது வேலைகளை செய்தனர்.

தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்த நிலையில் மீண்டும் அலுவலகத்திற்கு செல்ல ஊழியர்கள் பலர் தயக்கம் காட்டுகின்றனர் குறிப்பாக ஐடி கம்பெனிகளில் வேலை செய்த நபர்கள் பெரும்பாலும் 30 சதவீதம் அளவிற்கு மட்டுமே தற்போது தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர். மீதமுள்ள நபர்கள் தொடர்ந்து ஒர்க் ப்ரம் ஹோம் என்ற ரீதியில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். இதனால் ஊழியர்களுக்கு சில சாதகங்களும் ஏற்படுகிறது. இதேபோன்று நிறுவனங்களுக்கும் சில சாதக மற்றும் பாதகங்களும் ஏற்படுகிறது. இதுகுறித்து சிறுசேரியில் பிரபல ஐடி கம்பெனியில் பணிபுரியும் கோபிநாத் என்பவர் கூறுகையில், ‘‘எங்களது நிறுவனத்தில் ஊழியர்களை வீட்டில் இருந்து அலுவலகம் கொண்டு செல்வதற்கும், மீண்டும் வீட்டில் வந்து கொண்டு விடுவதற்கும் வாகன வசதி செய்து தரப்பட்டுள்ளது. நான் வீட்டில் இருந்து சிறுசேரிக்கு செல்வதற்கு 2 மணி நேரம் தேவைப்படும்.

இதனால் காலையில் அவசர அவசரமாக எழுந்து எனது பணிகளை முடித்துவிட்டு, 2 மணி நேரம் பயணம் செய்து வேலைக்கு செல்ல வேண்டி இருக்கும். இதேபோன்று இரவு 7 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வருவதற்கு 11 மணி ஆகிவிடும். இதனால், ஒரு வித மன அழுத்தத்தில் தினமும் வேலை செய்து வந்தோம். ஆனால் கொரோனா வந்த பிறகு வீட்டிலிருந்து வேலை செய்வதால் காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேர பயணம் மிச்சமாகிறது. இதன் மூலம் வீட்டில் அதிகமாக குழந்தைகளுடன் செலவிட நேரம் கிடைக்கிறது. மேலும் எப்போது வேண்டுமானாலும் நிறுவனங்கள் எங்களை தொடர்பு கொண்டு வேலை வாங்கலாம். இதன் மூலம் பயண செலவு மற்றும்  பிற செலவுகள் மிச்சமாகின்றன. மேலும் வீட்டில் இருந்து வேலை செய்வதால் நேரத்திற்கு காபி, டிபன், சாப்பாடு அனைத்தும் கிடைக்கிறது. பெரிய பிரச்னை ஏதும் இல்லை,’’ என்றார்.

போரூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல ஐடி கம்பெனியின் அட்மின் சூப்பர்வைசர் கூறுகையில், ‘‘கம்பெனிகளை பொறுத்தவரை தினமும் குறிப்பிட்ட  ஊழியர்களை அழைத்து வர ஒப்பந்தம் போட்டு உள்ளோம். அந்த அடிப்படையில் கடந்த இரண்டரை வருடங்களாக கம்பெனிகள் பயன்படுத்திய கார்களின் பயன்பாடு மிகவும் குறைவு. இதனால் கம்பெனிகளுக்கு ஒரு வகையில் லாபம். இதேபோன்று மின் கட்டணம் மிகவும் குறைவாக வருகிறது. காரணம் அதிக அளவிற்கு ஏசியை பயன்படுத்துவதில்லை. மேலும் செக்யூரிட்டிகள் குறைக்கப்பட்டுள்ளனர். ஹவுஸ் கீப்பிங் செய்பவர்களும் குறைக்கப்பட்டுள்ளனர். மதியம் கேன்டீன்களில் சாப்பாடுகள் மிகவும் குறைவாகவே தயார் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் கம்பெனிகளை பொருத்தவரை லாபம் தான். ஒரு ஊழியர் அலுவலகத்திற்கு  வந்து வேலை செய்து அவருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கும் போது அவர் என்ன வேலையை செய்வாரோ,  அதே வேலையைத்தான் அவர் வீட்டில் இருந்தும் செய்கிறார்.

ஊழியர்கள்  வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் கம்பெனிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது. அதே நேரத்தில் சில நேரங்களில் ஊழியர்களை ஆன்லைனில் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொண்டாலும் போனை எடுக்க மாட்டார்கள். வெளியே சென்று விட்டேன் என கூறுவார்கள். அலுவலகத்தில் இருந்தால், ஊழியர்களை தொடர்ந்து கண்காணித்து விரைந்து வேலையை முடிக்க உத்தரவிட முடியும். ஆனால், வீட்டில் இருந்து பணிபுரிபவர்களை தொடர்ந்து கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. தொழில் நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் ஒர்க் ப்ரம் ஹோம் என்பது கம்பெனி மற்றும் ஊழியர்களுக்கு ஒரு பாதுகாப்பான அம்சமாக இருக்கும்.  

அதனால் கொரோனா முடிந்த பின்பும் ஊழியர்களை கண்டிப்பாக கம்பெனிக்கு வந்து வேலை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. இதனால் தற்போது வரை 30 சதவீதம் அளவிற்கு மட்டுமே ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்து வருகின்றனர். குறைந்தபட்சம் வாரத்தில் 3 நாட்களாவது வேலைக்கு வந்தால் போதும் என பல ஐடி கம்பெனிகள் கூறியுள்ளன. அந்த 3 நாட்களுக்கும் அலுவலகத்திற்கு வர பணியாட்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா முழுவதுமாக முடிந்தாலும் மீண்டும் பழைய அளவிற்கு பணியாட்கள் நிறுவனங்களில் வந்து வேலை செய்வார்களா என்பது கேள்விக்குறி தான் என தெரிவித்தார்.

*தொடர்ந்து வீட்டிலிருந்து வேலை செய்வதால் வெளியே எங்கும் செல்ல முடியாத அளவிற்கு பணியாளர்கள் உட்படுத்தப்படுகின்றனர். இதனால் ஒரு வித மன அழுத்தத்திற்கு அவர்கள் ஆளாவதாகவும், காலையில் வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகத்திற்கு சென்று மற்ற நண்பர்களோடு பழகி மீண்டும் சில தூரம் பயணம் செய்து வீட்டிற்கு வருவதால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பல்வேறு மனிதர்களை சந்திக்க கூடிய சூழ்நிலை இருக்கும். இது ஊழியர்களின் மன மாற்றத்திற்கு ஒரு நல்ல மருந்தாக அமையும்.

ஆனால் வீட்டில் நான்கு சுவர்கள் மத்தியில் எப்போதும் கணிணியில் தங்களது பொழுதை கழிப்பதால் ஒரு விதமான டிப்ரஷன் எனப்படும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும். மேலும் கொரானா காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் உடல் எடை அதிகரித்து உடற்பயிற்சி இல்லாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே ஒர்க் கட் ஹோம் என்ற போதிலும் காலை மாலை என இருவேளையில் உடற்பயிற்சி என்பது அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

* கார் டிரைவர்கள் பாதிப்பு

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது நடுத்தர மக்கள் தான். குறிப்பாக சொந்தமாக கார்களை வாங்கி அதனை ஐடி கம்பெனியில் இணைத்து வாடகைக்கு ஓட்டிவந்த பெரும்பாலான  டிரைவர்களை ஐடி கம்பெனிகள் கொரோனாவின் போது ஒப்பந்தத்தில் இருந்து நீக்கி விட்டனர். கொரோனா முடிந்த பின்பு மீண்டும் வேலைக்கு திரும்பலாம் என்ற நிலையில் பல்வேறு ஐடி கம்பெனிகள் முழு அளவில் மீண்டும் கேப்களை இயக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

காரணம்  30% ஆட்கள் வருவதால் முழு அளவில் கேப்களை இயக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கின்றனர். இதனால் வாடகை கார் ஓட்டி வந்த பலர், தங்களது காருக்கு இஎம்ஐ செலுத்த முடியாமல், சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனங்கள் கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.

*சார்பு தொழில்கள் முடங்கியது

ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நம்பி பல்வேறு சார்பு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் வெளியே உள்ள டீக்கடைகள், டிபன் கடைகள், ஓட்டல்கள். சிற்றுண்டி கடைகள்   உள்ளிட்ட பல்வேறு தொழில்கள்  ஐடி நிறுவனத்தில் வேலை புரியும் தொழிலாளர்களை நம்பி இயங்கி வருகிறது. அவர்கள் போதிய அளவில் வேலைக்கு வரவில்லை என்றால்.

இவர்களின் தொழில் நஷ்டம் அடையும் சூழ்நிலை ஏற்படும். எனவே ஒரு தொழிலை நம்பி மற்றொரு சார்பு தொழில் வளர வேண்டும் என்றால் குறிப்பிட்ட அந்த தொழில் நன்றாக வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும். தற்போது, பெரும்பாலான நபர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால் அவர்களை நம்பி உள்ள சார்பு தொழில்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: