புழல் பகுதியில் கூடுதலாக வருவாய் ஆய்வாளரை நியமிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் வருவாய்த்துறை அலுவலகத்துக்கு உட்பட்ட மாதவரம், ரெட்டேரி, லட்சுமிபுரம், புத்தகரம், கல்பாளையம், விநாயகபுரம், சூரப்பட்டு, பாரதிதாசன் நகர், சண்முகபுரம், கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், புழல், காவாங்கரை, வடபெரும்பாக்கம், செட்டிமேடு, மஞ்சம்பாக்கம், மாத்தூர் உள்ளிட்ட வருவாய் கிராம மக்கள், பிறப்பு, இறப்பு, வருவாய், சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற ஒரே ஒரு வருவாய்துறை ஆய்வாளர் அலுவலகம் மட்டுமே மாதவரம் மண்டல அலுவலக அருகில் செயல்பட்டு வருகிறது. தினசரி நூற்றுக்கணக்கானோர் சான்றிதழ் விண்ணப்பிக்க இங்கு வருவதால், கூட்ட நெரிசல் காரணமாக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி இல்லையென்றால் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. அதிகாரிகளுக்கும் பணிச் சுமை ஏற்படுகிறது.  எனவே, புழல் வருவாய்துறை அலுவலகம் காலியாக உள்ளதால், அந்த இடத்துக்கு ஒரு வருவாய்துறை ஆய்வாளரை கூடுதலாக நியமிக்க சம்பந்தப்பட்ட வருவாய்த் துறையினர் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மாதவரம் வருவாய்த்துறை அலுவலகம் எல்லை பகுதியில் உள்ள சூரப்பட்டு, பாரதிதாசன் நகர், லட்சுமிபுரம், ரெட்டேரி உள்ளிட்ட பகுதி மக்கள் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் உள்ள மாதவரம் சென்று சான்றிதழ் பெறும் அவல நிலை உள்ளது.

ஏற்கனவே புழல் காந்தி பிரதான சாலையில் செயல்பட்டு வந்த வருவாய்த்துறை அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்பட்டு செங்குன்றம் பகுதிக்கு சென்று விட்டது. எனவே காலியாக உள்ள இந்த இடம் தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்த பகுதியில் புதிதாக மேலும் ஒரு வருவாய்த்துறை அலுவலரை நியமித்து பொதுமக்கள் பிரச்னையை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: