மாதவரத்தில் மெட்ரோ சுரங்கப்பாதை பணி அக்டோபர் மாதம் தொடங்கும்: நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் மாதவரத்தில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக, சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் சீனாவிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. கடந்த வாரம் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த இயந்திரம் மூலம் மாதவரத்தில் தொடங்கி கெல்லீஸை நோக்கி முதல் சுரங்கப்பாதை அமைக்கும் முறையில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருமாத கால இடைவெளியில் இரண்டாவது சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் பயன்பாட்டிற்கு வரும். மாதவரம் முதல் சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் கலங்கரைவிளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் 118.9 கி.மீ. மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் அமைய உள்ளது.

இதில் மாதவரம் முதல் சிப்காட் வழித்தடத்தின் ஒரு பகுதியாக, மாதவரத்தில் இருந்து கெல்லீஸ் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. பொதுவாக, சிறிய கால இடைவெளியில் இரண்டாவது சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் அமைக்கப்படும். 100மீ அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளியில் செயல்படுவது நல்லது என்பதால் கால இடைவெளி கொடுக்கப்படுகிறது. மாதவரத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்குவதற்கு முன் ஆய்வுகள், மாற்று பணிகள் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளை கண்காணித்து சுரங்கத்தை அமைக்கும் பணி நடைபெறும். கெல்லீஸ் முதல் தரமணி வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும். படிப்படியாக நிலத்தடி பணிகள் நகரின் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப்பணி ரூ.61,843 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதற்காக 23 சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

அதில் 12 இயந்திரங்கள் தமிழகத்தில் இருந்தும், புனேவிலிருந்து ஒரு இயந்திரமும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் ஜெர்மனியில் இருந்து ஒரு இயந்திரமும், சீனாவிலிருந்து 5 இயந்திரமும் பயன்படுத்தப்பட உள்ளன. இவை நிலத்தடி கட்டுமானத்தை விரைவுபடுத்த உதவுகிறது. இவற்றில் சில இயந்திரங்கள் ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கும். பொதுவாக நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 8 முதல் 10 மீ துளையிடப்படும். ஆனால் புவியியல் நிலைமைகள் கடினமாக இருந்தால் 5 மீ வரை குறைய வாய்ப்புள்ளது. உரிய காலத்தில் திட்டத்தை முடிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது என  மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: