சென்னையில் சிறுமியை மிரட்டி பலாத்காரம் இன்ஸ்பெக்டருக்கு 20 ஆண்டு சிறை: 8 பேருக்கு ஆயுள் தண்டனை; 12 பேருக்கு 20 ஆண்டு ஜெயில்; சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: சென்னையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வடசென்னையில் 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு, வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து, சிறுமியின் தாய் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்மீது வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பலருக்கு  தொடர்பு இருந்தது தெரியவந்தது. சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளி பெருமளவில் பணம் சம்பாதித்துள்ளனர். பல முக்கிய பிரமுகர்களுக்கு சிறுமியை விருந்தாக்கியுள்ளனர். அதன் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதி சிறுமியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவரது உறவினருக்கு தரப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யும்படி அப்போது கமிஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனராக இருந்த அருண் ஆகியோர் உத்தரவிட்டனர்.  

இதையடுத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் உறவினர்கள் 8 பேர் மற்றும் சிறுமியை மிரட்டி பாலியல் உறவு கொண்ட அப்போதைய எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜ பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 22 பேர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களில் இரு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலத்தில் இறந்துவிட்டார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட 21 பேர் சார்பிலும் தனித்தனியாக வாதிடப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி ஆஜராகி சாட்சியம் அளித்து குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். போக்சோ வழக்கு என்பதால் மூடிய அறையில் சாட்சி விசாரணை நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். சான்றாவணங்கள், மருத்துவ அறிக்கைகள், தடயவியல் அறிக்கைகள் அனைத்தும் விசாரணையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சுமார் ஒன்றரை ஆண்டுக்கும் மேல் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்து. இதையடுத்து கடந்த 15ம் தேதி வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி அறிவித்தார். தண்டனை மற்றும் அபராதம் குறித்த விபரங்களை பின்னர் அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது.

தண்டனை விபரம் வருமாறு: சிறுமியின் நெருங்கிய உறவினர்கள் 8 பேருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையிலான ஆயுள் தண்டனையும் தலா ரூ.17 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அனிதா (எ) கஸ்தூரி, பாஜ பிரமுகர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, காமேஷ்வர்ராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம், சிவில் சப்ளைஸ் அதிகாரி கண்ணன் ஆகிய 13 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

அனிதாவுக்கு ரூ.15 ஆயிரமும், ராஜேந்திரனுக்கும் 50 ஆயிரமும், இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும், காமேஷ்வர்ராவுக்கு ரூ.50 ஆயிரமும், முகமது அசாருதீனுக்கு ரூ.5 ஆயிரமும், பசுலுதீனுக்கு ரூ.5 ஆயிரமும், வினோபாஜிக்கு ரூ.50 ஆயிரமும், கிரிதரனுக்கு ரூ.50 ஆயிரமும், ராஜாசுந்தருக்கு ரூ.1 லட்சமும், நாகராஜுக்கு ரூ.5 ஆயிரமும், பொன்ராஜுக்கு ரூ.5 ஆயிரமும், வெங்கட்ராமுக்கு ரூ.5 ஆயிரமும், கண்ணனுக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையான மொத்தம் ரூ.7 லட்சத்து ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக தரவேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு தரக்கூடிய நிவாரண நிதி ரூ.5 லட்சமும் தரப்பட வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதால் தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலத்தில் கழித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதி தண்டனை விபரத்தை அறிவித்தார். முன்னதாக 21 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டவுடன் தண்டனை பெற்றவர்கள் நீதிமன்றத்தில் தேம்பி அழுதனர். பின்னர் அவர்களை போலீசார் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். தண்டனை விபரம் அறிவிக்கப்படவிருந்ததால் வழக்கறிஞர்களும், சட்டம் பயிலும் மாணவர்களும் நீதிமன்றத்தில் குழுமியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: