சின்னாளபட்டி அருகே கரியன்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் இருந்து அம்பாத்துரை செல்லும் வழியில் தேவி கருமாரியம்மன் கோவில் எதிரே கரியன்குளம் உள்ளது. இக்குளத்தில் தற்போது மழைநீர் தேங்கியுள்ளது. அம்பாத்துரை ஊராட்சி மற்றும் சின்னாளபட்டி 17வது வார்டு சோமசுந்தரம்காலனி, ஜவஹர் காலனி, காமாட்சி நகர், பொன்னன் நகர், சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இந்த குளம் உள்ளது.

தற்போது இந்த குளத்தில் சின்னாளபட்டி 16, 17வது வார்டு பகுதியில சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் மற்றும் நெகிழிபை, கெமிக்கல் கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் மழைபோல் குவித்து வருவதால் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கின்றன. பொதுமக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் கரியன்குளம் மாசடைவதால் பொதுமக்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது குளத்தில் தேங்கி நிற்கும் நீர் பச்சை நிறமாக மாறிவருவதால், மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதால், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த குளத்தில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து, குளத்தை சுத்தம் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: