ஆன்லைனில் புக் செய்ததோ டிரோன் காமிரா, பார்சலில் வந்ததோ பொம்மை கார்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் பிரபல தனியார் நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள டிரோன் காமிரா புக் செய்தவருக்கு, பார்சலில் பொம்மை கார் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீபெரும்புதூர், சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் (35). ஏசி மெக்கானிக். இவரது நண்பர் சுரேஷ் என்பவருக்கு டிரோன் காமிரா தேவைப்பட்டது. இதற்காக இருவரும் ஆன்லைனில் தேடியபோது, பிரபல பிளிப்கார்ட் செயலியில் ரூ.79,064 மதிப்பில் டிரோன் காமிரா இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 20ம் தேதி கிரெட் கார்டு மூலம் பணத்தை மொய்தீன் செலுத்தி பிளிப்கார்ட்டில் ரூ.79,064 மதிப்புள்ள டிரோன் காமிராவுக்கு ஆர்டர் செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை பிளிப்கார்ட்டில் இருந்து மொய்தீன் வீட்டு முகவரிக்கு பார்சல் வந்தது. அந்த பார்சலை மொய்தீன், சுரேஷ் ஆகிய இருவரும் வீடியோ பதிவுடன் பிரித்துள்ளனர். அந்த பார்சலில் டிரோன் காமிராவுக்கு பதிலாக, ரூ.100 மதிப்புள்ள பொம்மை கார் இருப்பதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பார்சல் டெலிவரி செய்தவரை மொய்தீன் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் நிலையில் இருந்தது.

இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தில் இன்று காலை மொய்தீன், சுரேஷ் ஆகிய இருவரும் புகார் அளித்தனர். அந்நிறுவன அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். எனினும், ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள டிரோன் காமிரா பார்சலில் வருவதற்கு பதிலாக, பிரபல நிறுவனத்தின் சார்பில் பொம்மை காரை அனுப்பி வைத்த தகவல் அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பார்சலை நிறுவன பிரதிநிதிகள் யாரேனும் பிரித்து, விலை மதிப்பிலான காமிராவை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக பொம்மை காரை வைத்து அனுப்பி வைத்தார்களா என்ற சந்தேகமும் மக்களிடையே நிலவி வருகிறது.

Related Stories: