சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது: பைக் மற்றும் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

துரைப்பாக்கம்: சென்னை பெருங்குடி, காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கண்ணகி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, செம்மஞ்சேரி உதவி கமிஷனர் ரியாசுதீன் தலைமையில் கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் முருகன், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், தலைமை காவலர் லிவிங்ஸ்டன் ஆகியோர் கொண்ட தனிப்படை மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கண்ணகி நகர் நுழைவாயில் அருகே ஒரு பைக்கில் மூன்று பேர் வந்தனர். போலீசாரை கண்டதும் பைக்கை வந்த வழியே திருப்ப முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் அவர்களை சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் மூவரையும் கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில், வேளச்சேரி, எம்ஜிஆர் நகரை சேர்ந்த டேட்டா ஆர்ட்டிஸ்ட் சென்மோன் (26), சோழிங்கநல்லூர் 6வது தெருவை சேர்ந்த மொபைல் ஷோரூம் ஊழியர் மணிகண்டன் (25), பெருங்குடி சீவரம் 2வது தெருவை சேர்ந்த ஆன்லைன் டெலிவரி ஊழியர் ராகுல் (19) என தெரிய வந்தது. மேலும், இவர்கள் மூவரும் சென்னை சத்யா நகரில் கஞ்சா மொத்தமாக வாங்கி இப்பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் சென்னை சத்யா நகரில் இருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு இப்பகுதிகளுக்கு வந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எங்களுக்கு தகவல் வந்தது. எனவே, தனிப்படையினர் மூலம் தீவிரமாக கண்காணித்து வந்தோம். இந்நிலையில்தான், மூன்று பேரும் பிடிபட்டுள்ளனர். போதை பொருட்களை விற்கும் மற்ற நபர்களைகண்காணித்து கைது செய்ய உள்ளோம்’’ என்றார்.

Related Stories: