துரைப்பாக்கம் பகுதியில் கோயில் நிலத்தில் திரியும் பன்றிகள்: பிடிக்க வலியுறுத்தல்

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீசெங்கழுநீர் விநாயகர், பிடாரி அரியாத்தம்மன், வேம்புலி அம்மன், செங்கழனியம்மன், கங்கையம்மன் கோயிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் சவுக்கு மரங்கள் மற்றும் முட்புதராக காட்சியிளிக்கிறது. இங்குள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும் சிலர் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை இந்த இடத்தில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த இடத்தில் சுற்றித் திரியும் 50க்கும் மேற்பட்ட பன்றிகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைவதால், பொதுமக்கள் காய்ச்சல் பீதியில் உள்ளனர்.

சிலர் இந்த இடத்தை இயற்கை உபாதையை கழிப்பதற்கு உபயோகிக்கின்றனர். இரவில் மர்ம நபர்கள் இந்த இடத்தில் சமூக விரோத செயலில் ஈடுபடுவதால், பெண்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, இங்குள்ள பன்றிகளை அகற்றுவதோடு, இந்த இடத்தை தூய்மையான முறையில் வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: