ஆஞ்சநேயர் கோயிலில் அமர்ந்து ஆபாசப்படம் பார்த்த வாலிபர் கைது: ஒரு வார தேடலுக்கு பிறகு சிக்கினார்

சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அமர்ந்து செல்போனில் ஆபாசப்படம் பார்த்த வாலிபரை போலீசார் ஒரு வார தேடலுக்கு பிறகு கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணி மேயர் சிட்டி பாபு தெருவில் பிரபலமான ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இதனால், பாதுகாப்பு கருதி கோயில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனால் அதிகளவில் பெண்கள் வந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கோயிலில் அமர்ந்தபடி, பெண்கள் பார்க்கும் வகையில் தனது செல்போனில் ஆபாச படங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த பெண்கள் முகம் சுழித்தபடி அந்த வாலிபரை திட்டிச் சென்றனர். ஆனாலும், அந்த வாலிபர் ஆபாச படம் பார்ப்பதை விடவில்லை.

ஒருகட்டத்தில், வாலிபரின் செயல் குறித்து பெண்கள் கோயில் குருக்களிடம் கூறினர். உடனே அவர் சிசிடிவி பதிவுகளை பார்த்த போது, அந்த வாலிபர் பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்ற தவறாக நோக்கில் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே கோயில் குருக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு சம்பவம் குறித்து குருக்கள் குருபிரசாத் அளித்த புகாரின்படி, ஜாம்பஜார் போலீசார் மத உணர்வுகளை புண்படுத்துதல், ஆபாச செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வந்தனர்.

கோயில் அருகேயுள்ள 65 சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஒரு வார தேடலுக்கு பிறகு ஆபாச படம் பார்த்த புதுச்சேரியை சேர்ந்த அருண் (27) என்ற வாலிபரை நேற்று முன்தினம் ஜாம்பஜார் போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மனைவியை பிரிந்து, சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வந்தது தெரிந்தது.

Related Stories: