மாநிலம் முழுவதும் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து 17 மாவட்டங்களின் கலெக்டர்கள் மற்றம் போலீஸ் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை அடுத்த தாம்பரம், மதுரை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் பாஜ, ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் வேண்டும் என்றே சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கலாம் என்று திட்டமிடுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில் உள்துறைச் செயலாளர் பணீந்திரரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேநேரத்தில் இந்தக் கூட்டத்தில் கோவை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 17 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்கள் ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துவது, வாகனச் சோதனை, சந்தேக இடங்களில் சோதனை நடத்துவது, சந்தேக நபர்களை கண்காணிப்பது, தவறு செய்யும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து உரிய உத்தரவுகளை தலைமைச் செயலாளர் இறையன்பு அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்ைன நகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் கூடும் ரயில், பஸ் நிலையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கவர்னர் மாளிகை, பாஜ அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டல்கள், லாட்ஜ்களில் சோதனை நடத்தப்பட்டன. நேற்று இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிபட்ட 10க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: