காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

பூந்தமல்லி: சென்னை அடுத்த திருவேற்காடு பகுதியில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் கடந்த 7ம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் திருவேற்காடு, செல்லியம்மன் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் கண்ணன் (19) என்பவர் சிறுமியை, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், சிறுமியும், அவ்வாலிபரும் திருப்பூரில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார், சுரேஷ் கண்ணன் பிடியில் இருந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர். பின்னர் இருவரையும் திருவேற்காடு காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் சிறுமியை சுரேஷ் கண்ணன் காதலிப்பதாகக் கூறியும், திருமண ஆசை காட்டியும் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. பின்னர்,சிறுமிக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. பிறகு, சிறுமிக்கு அறிவுரை கூறி, பெற்றோரிடம் போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர். இதைடுத்து, சுரேஷ் கண்ணனை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: