தீன்தயாள் உபாத்தியாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் ஆங்கிலம், மென்திறன் பயிற்சி பாட திட்டத்தை தரப்படுத்தும் ஒப்பந்தம்: மகளிர் மேம்பாட்டு நிறுவனம்-பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து நடத்துகிறது

சென்னை: தீன்தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் மற்றும் மென்திறன் பயிற்சி பாடத் திட்டத்தினை தரப்படுத்துதல் குறித்து இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்-பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனம் இணைந்து செயல்படும் கூட்டணி செயல்பாட்டு ஒப்பந்தம் அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் முன்னிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தீன்தயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ்(DDU-GKY)ஆங்கிலம் மற்றும் மென்திறன்  பயிற்சி பாடத்திட்டத்தினை தரப்படுத்துதலுக்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும்-பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனமும் இணைந்து செயல்படும் கூட்டணி செயல்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தின் ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு 20க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் கீழ் 80க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளில் 130 பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் மூலம் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிக்கு பின் உரிய வேலை வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தும் நோக்கில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்தை தொழில் நுட்ப உதவி நிறுவனமாக கொண்டு செயல்படுத்திட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து DDU-GKY பயிற்சி நிறுவனங்களை சார்ந்த ஆங்கில அறிவு மற்றும், மென்திறன்பயிற்சி வழங்கும் பயிற்சியாளர்களுக்கும் இந்நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு அவர்கள் வாயிலாக DDU-GKY திட்டத்தின் கீழ் பயிற்சி பெற உள்ள 40000 இளைஞர்களுக்கு தரத்துடன் கூடிய சிறந்த ஆங்கில அறிவு பயிற்சி கிடைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: