பண மோசடி வழக்கில் தலைமறைவு: சென்னை விமான நிலையத்தில் மும்பை தொழிலதிபர் கைது

சென்னை: மகாராஷ்டிர மாநிலம், மும்பையை சேர்ந்தவர் நிக்மத் அலி (58), தொழிலதிபர். இவர் மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், கடந்த ஆண்டு பணமோசடி வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிக்மத் அலியை தேடிவந்தனர். ஆனால், அவர், கைது நடவடிக்கைக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார். கடந்த ஜூன் மாதம் தொழிலதிபர் நிக்மத் அலியை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக மும்பை மாநகர போலீஸ் கமிஷனர் அறிவித்தார்.

இதை தொடர்ந்து, அனைத்து விமான நிலையங்களிலும் அவரது புகைப்படத்தை ஒட்டி, குடியுரிமை அதிகாரிகள் தேடிவந்தனர். இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளின் உடமைகள், பாஸ்போர்ட் ஆகியவற்றை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், மும்பை போலீசாரால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி தொழிலதிபர் நிக்மத் அலியும் வந்திருந்தார். இந்த விவரம் அவரது பாஸ்போர்ட் மூலம் தெரியவந்தது.

இதை தொடர்ந்து, குடியுரிமை அதிகாரிகள் அவரை தனி அறையில் அடைத்து மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வந்தவுடன் தொழிலதிபர் நிக்மத் அலி  ஒப்படைக்கப்படுவார் என குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: