கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் பழுது; போக்குவரத்து பாதிப்பு: பயணிகள் அவதி

கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று மாலை சென்னை நோக்கி கிளம்பிய மின்சார ரயிலின் இன்ஜின் திடீரென பழுதாகி நின்றது. பின்னர் 2 மணி நேரம் போராடி இன்ஜினில் ஏற்பட்ட பழுதை ஓரளவு சரிசெய்து பணிமனைக்கு கொண்டு சென்றனர். அந்த ரயிலில் இருந்த பயணிகளை மாற்று ரயிலில் அனுப்பி வைத்தனர். ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஏராளமான பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் ரயில் மார்க்கத்தில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் கும்மிடிப்பூண்டி-சென்னை, சூலூர்பேட்டை-சென்னை சென்ட்ரல் மற்றும் வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி-செங்கல்பட்டு ஆகிய மின்ரயில் மார்க்கத்தில், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் நாள்தோறும் மின்சார ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.40 மணியளவில் சென்னை சென்ட்ரலுக்கு மின்சார ரயில் கிளம்பியது. இந்த ரயில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றபோது, இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. ரயில் இன்ஜினில் ஏற்பட்ட பழுதை ஊழியர்களால் சரிசெய்ய முடியவில்லை. இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கவரப்பேட்டையில் மின்சார ரயில் நின்றது. இதனால் அவ்வழியே சென்னை நோக்கி செல்ல வேண்டிய மின் ரயில்களும் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் பழுதான மின்ரயிலை பயணிகளுடன் மெதுவாக இயக்கி, பொன்னேரி ரயில் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பயணிகளை மாற்று ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த மின்சார ரயிலை பழுதுபார்க்கும் பணிமனையில் நிறுத்தப்பட்டு, இன்ஜின் கோளாறை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: