நீட் தேர்வு குறித்த நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது: ஒன்றிய கல்வி அமைச்சர் பேட்டி

சென்னை: நீட் தேர்வு ஒன்றிய அரசின் முடிவல்ல. அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இதில் அரசு தலையிட முடியாது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒருநாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். அவர், பாஜ சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர், சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உடனிருந்தனர்.

சந்திப்புக்குப் பின்னர், தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டி: தேசிய கல்விக்கொள்கையை தமிழகம் விரைவில் ஏற்றுக்கொள்ளும். தமிழ் ஒரு தேசிய மொழி. கல்வி என்பது தாய்மொழியில் இருக்க வேண்டும். அதன்படி, தேசிய கல்விக் கொள்கையில் தமிழ்மொழியும் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகம் கல்வியில் சிறந்த பாரம்பரியத்தை கொண்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கையின் கட்டமைப்பில் தமிழகம் எப்போதும் முன்னணியில் இருக்கும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது, அனைத்து தரப்பு மக்களையும் சமன்படுத்தவே நீட் தேர்வு. ஏற்கனவே நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மீண்டும் சொல்கிறேன், நீட் தேர்வு அரசின் முடிவல்ல. அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இதில் அரசு தலையிட முடியாது.

Related Stories: