திருவாடானை பகுதியில் நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்

திருவாடானை : திருவாடானை பகுதியில் நேரடி நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என திருவாடானை தாலுகா அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக 28 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கோடையில் பெய்யும் சிறிய மழையை கொண்டு நிலங்களை உழுது தயார் செய்து செப்டம்பர் மாதத்தில் நேரடி நெல் விதைப்பாக விவசாயிகள் விதைத்து விடுவது வழக்கமான ஒன்று. இவ்வாண்டு ஓரளவு கோடை மழை பெய்ததால், நிலங்களை உழுது தயார் செய்து வைத்திருந்தனர். தற்போது இப்பகுதியில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக வெளி மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வந்து குவிந்து உள்ளன. இதனை பயன்படுத்தி இரவும், பகலுமாக நெல் விதைப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், முன்பெல்லாம் ஆடி மாதம் 18ம் பெருக்கில் விதைப்பு செய்து முடித்து விடுவோம். தற்போது பருவமழை காலம் கடந்து பெய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனால் தாமதமாக விவசாய பணிகளை செய்ய வேண்டி உள்ளது. இப்போது திருவாடானை வட்டாரத்தில் விவசாயிகள் அனைவரும் தீவிரமாக நேரடி நெல் விதைப்பு செய்து வருகிறோம். டீசல் விலை உயர்வால் டிராக்டர் வாடகை கூடி விட்டது. சென்ற ஆண்டு மணிக்கு ரூ.600 வாடகை கொடுத்தோம்.

இந்த ஆண்டு ஒரு மணி நேரத்திற்கு டிராக்டர் வாடகை ரூ.900 என கூடிவிட்டது. மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதால் விவசாய செலவும் கூடிக் கொண்டே போகிறது. எங்களுக்கும் வேறு வழி இல்லை என்றனர்.

Related Stories: